தமிழர்களுக்கு நீதி கோரி ஐ.நா முன்றலில் கவனயீர்ப்பு போரட்டம்
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ் விசேட காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறான முறுகல் நிலை தொடந்து பின்னர் பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.
ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.
இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்தி இப் பேரணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.