Breaking News

வடமாகாண சபை முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணம் கைத்தடியில் அமைந்துள்ள வடமாகாண சபை முன்பாக இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

இன்று காலை 9.30 மணிக்கு வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாக இருந்த நிலையில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாகாண சபையின் நுழைவாயிலை இடைமறித்து வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் வடமாகாண சபை பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்த போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆகவே உடனடியாக தங்களுக்கு நியமனங்களை வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் சபை அமர்வுகள் நிறைவடைந்து அதிகாரிகள் வரும்வரை ஆர்ப்பாட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண சபையின் நுழைவாயில் அருகில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.