சர்வதேச விசாரணையே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் - சிறிதரன்
சர்வதேச விசாரணையே தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்பது தான் எமது முடிந்த முடிவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கும் வகையில் செயற்படமாட்டோம். அதன் அடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
தேர்தல் காலங்களிலும் நாங்கள் கூறியிருந்தோம் சர்வதேச தரத்திலானதும் தமிழ் மக்கள் நம்பக் கூடிய வகையிலும் சர்வதேச விசாரணை அமையவேண்டும் என்று. அந்த விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
மேலும் இலங்கைக்கு ஒரு நல்லெண்ணத்தையும் நல்லாட்சிக்கான கால ஓட்டத்தையும் வழங்குவதற்கு அமெரிக்கா சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கையிலே ஒரு நீதியான விசாரணை நடைபெறும் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா இந்த பிரேரணையில் சில மாற்றங்களை மேற்கொள்ளும் என்ற ஊகங்களே வெளிவந்துள்ளன.
ஆனால் எங்களை பொறுத்தவரையில் அறிக்கை முழுமையாக வெளிவந்ததன் பின்னரே அதிலே என்னென்ன கூறப்பட்டுள்ளன. என்னென்ன கையாளப்பட்டுள்ளது மற்றும் அதன் நன்மையென்ன தீமையென்ன என்ற விடயங்களை பேசமுடியும்.
மேலும் அமெரிக்கா ஏமாற்றாது என்றும் உலகம் எங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கையையும் தமிழ் மக்கள் மனதில் வைத்துள்ளனர்.
இப்பிரேரணையை அமெரிக்கா என்ற உலக வல்லரசு கொண்டு வந்ததனால் அதற்கு ஒரு கனதியும் காத்திரமும் கிடைத்திருக்கின்றது. எனவே அந்நாடுகளுடைய செயற்பாடுகளை மையமாகக் கொண்டுதான் எமது வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
அத்துடன் அவர்கள் தமது நலன்சார்ந்த சில விடயங்களை இதற்குள் புகுத்தி கொண்டாலும் அதனை அனுசரித்து போகவேண்டிய தேவையும் எமக்குண்டு. அதேநேரம் அவர்கள் சொல்லுகின்ற விடயங்கள் எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்ட வேண்டியதில்லை.
நாங்களும் எங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக கூறுகின்றபோது அவர்கள் அந்த விடயங்களிலும் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதற்குரிய அழுத்தத்தையும் உண்மைகளையும் அவர்க ளுக்கு சொல்லவேண்டும் என்றார்.