உள்ளக விசாரணை பொறிமுறை குறித்து ஐ.நா.வுக்கு விளக்கமளிக்கவுள்ளது இலங்கை
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுடன் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான அதிகாரிகளும் இணைந்துகொள்ளவுள்ளனர். மேலும் முதல் நாள் அமர்வின்போது உரையாற்றவுள்ள
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்ளிட்டவர்கள் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கவுள்ளனர். அத்துடன் அன்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்றவுள்ளார்.
இலஙகையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பாகவும் இதன்போது அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கை மனித உரிமை பேரவைக்கு இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி மனித உரிமை பேரவையில் அது தொடர்பில் விசாரணையும் நடத்தப்படவுள்ளது.
அந்த விவாதத்தில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளன. விவாதத்தின் இறுதியில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் ஒருவர் பதிலளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இம்முறை வழமைக்கு மாறாக இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றத்தை வெளிக்காட்டும் நோக்கில் உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு போதிய கால அவகாசம் ஒன்றை வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்த பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது.
அது மட்டுமன்றி அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளமை தொடர்பில் உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் விசேட உபகுழுக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அலுவலகத்தில் இந்த விசேட உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன் இதில் கலந்துகொள்ளுமாறு மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமெரிக்கா ஏன் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவருகின்றது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவுள்ளதுடன் அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கையும் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணைக்கு ஆதரவாக 26 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன.
கடந்த 2013 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா ஒரு பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 31 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. ஒரு நாடு நடுநிலை வகித்தது. அத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டும் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வந்தது.
இந்த இரண்டு பிரேரணைகளிலும் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகரமான உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இலங்கை தொடர்பான உள்ளக விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் முன்னெடுத்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை செயற்பாடுகள் செயற்பாட்டு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 12 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரேரணையில் கோரப்பட்டிருந்தது.
அதற்கமைய 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் அலுவலகத்தின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஜனவரி மாதம் ஆகும்போது விசாரணை அறிக்கை தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமை அலுவலகம் இலங்கை குறித்த விசாரணையை முடித்திருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் இலங்கையின் ஆறுமாத கால நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவையின் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை குறித்த அறிக்கை செப்ம்டெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. ஆனால் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் 30 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டது.
அந்தவகையில் இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் எதிர்வரும 30 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில் சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ளது.