இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் ஒத்திவைப்பு
புதிய கூட்டு அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. நாளையே 5 அமைச்சர்கள், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டு அரசாங்கத்தில் இடம்பெறும் 48 அமைச்சர்களில், 43 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். எஞ்சிய 5 அமைச்சர்களும், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இன்று பதவியேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று பதவியேற்பு நிகழ்வு இடம்பெறாது என்றும், நாளையே இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்படவுள்ள 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களில் 27 பேர் ஐதேகவைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்றும், எஞ்சியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்றும் கூறப்படுகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அமைச்சர் மற்றும் பிரதி, இராஜாங்க அமைச்சர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினாலேயே, இன்றைய நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.