ஈழத்துக்கான வழிமுறைகளை ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் ஏற்படுத்துகின்றனர்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் தனி ஈழம் ஒன்றுக்கான அறிகுறியாகவே தென்படுகின்றன. அதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
உள்ளக விசாரணைப் பொறிமுறை சர்வதேச சதித்திட்டத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கைக்கு ஆதரவான நாடுகளை தலையிடவிடாது புலம்பெயர் புலிகளின் தேவையை நிறைவேற்றும் நோக்கத்தில் புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மையான ஹெல உறுமய கட்சியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்க இடம் கொடுக்கப்போவதில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் இந்த அரசாங்கமே அதி உச்ச பிரிவினைவாதத்துக்கு முழுமையான உதவிகளை வழங்கி வருகின்றது. விடுதலைப்புலிகள் ஆயுதம் மூலமாக இந்த நாட்டில் மிகப்பெரிய பிளவினை ஏற்படுத்த முயற்சித்த வேளையில் அதை எமது இராணுவமும் எமது அரசாங்கமும் முழுமையாக அழித்து நாட்டை காப்பாற்றியது. எனினும் நாட்டை பிரிக்கும் ஆயுத போராட்டம் முடிவடைந்தாலும் அரசியல் நகர்வுகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனி ஈழம் என்ற கொள்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. புலிகளை நியாயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தை தண்டிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதையும் தாண்டி சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே இவை அனைத்தும் இன்று நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தனி ஈழம் அமைவதற்கான அனைத்து அறிகுறிகளும் இதன் மூலமாக தென்படுகின்றன. அதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
உள்ளக விசாரணை
மேலும் நாட்டில் ஜனநாயகம், நல்லாட்சி மலர்ந்துள்ளதாக அனைவரும் நம்புகின்றனர். ஆனால் அதையும் தாண்டிய ஆபத்தொன்று நாட்டை நோக்கி வருகின்றது. அதாவது இம்மாத இறுதியில் இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் உள்ளக பொறிமுறைகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது. ஆனால் சர்வதேச விசாரணை அறிக்கையிலும் உள்ளக விசாரணை பொறிமுறையை பலப்படுத்தக் கோரிய அழுத்தங்களே முன்வைக்கப்படும். அது இப்போது அனைவருக்கும் தெளிவாக தெரிந்துள்ளது. எனினும் அதனால் நாம் நன்மையடையப் போவதில்லை.
ஏனெனில் இந்த உள்ளக விசாரணை பொறிமுறை சர்வதேச சதித்திட்டத்துக்கு அமையவே முன்னெடுக்கப் படவுள்ளது. அதேபோல் இலங்கைக்கு ஆதரவான நாடுகளை தலையிட விடாது புலம்பெயர் புலிகளின் தேவையை நிறைவேற்றும் நோக்கத்திலேயே இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
எமது இராணுவ வீரர்களை சர்வதேச கூண்டில் நிறுத்தி தண்டிக்கவும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளை நியாயப்படுதவுமே இந்த அரசாங்கம் தனது முழுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே இந்த நாட்டை நேசிக்கும், இராணுவத்தை நேசிக்கும் சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியை தடுக்க போராட வேண்டும். பிரிவினைவாதிகளின் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்.
குறுகிய பயணம்.
மேலும் இந்த அரசாங்கதின் பயணம் நெடுஞ்சாலை பயணமாக அமையும் என பிரதமர் தெரிவித்துள்ளார். உண்மை தான் ஆனால் பிரதமர் ரணில் ஒன்றை மறந்துவிட்டார். நெடுஞ்சாலை பயணம் சுகமானது தான் ஆனால் மிகவும் குறுகிய பயணமாக அமைத்துவிடும். அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவின் பயணமும் மிகவும் விரைவில் முடிவடைந்துவிடும். ஆகவே வெகு விரைவில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.