அமைச்சரவை அதிகரிப்புக்கு அங்கீகாரம்பெற பிரேரணை பிரதமர் சமர்ப்பிப்பார்: ஜே.வி.பி. எதிர்க்கும்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான பங்காளியுமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ,
தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அமையப் பெறவிருக்கின்ற தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பிரேரணை ஒன்று இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சரவையின் அமைச்சுக்களின் எண்ணிக்கை அரசியலமைப்பு சட்டத்தின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்றும் அதனை அதிகரிக்க முயல்வது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுகின்ற செயற்பாடு என்றும் ஜே.வி.பி. கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே இன்று பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்பித்து அமைச்சரவையின் எண்ணிககையை அதிகரிப்பதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
இதன்படி அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். பிரதமரால் சமர்பிக்கப்படுகின்ற பிரேரணையானது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான பங்காளியுமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதென தீர்மானித்திருக்கின்ற நிலையில் அமைச்சரவையின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கையை 45 ஆக உயர்த்துவதற்கும் இவ் எண்ணிக்கையை அரசாங்கம் அமைக்கும் இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே அமைச்சரவை அதிகரிப்பற்கு ஜே.வி.பி. எதிர்ப்பினை வெ ளியிட்டுள்ளது. அதுமாத்திரமின்றி இவ் விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படுதல் வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைச்சரவையின் எண்ணிக்கையானது 30 க்குள் மட்டுப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் தேசிய அரசாங்கம் ஒன்று நிறுவப்படும் சந்தர்ப்பத்தில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் தேவை ஏற்பட்டால் அது தொடர்பில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுதல் வேண்டும் என தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலும் ஜே.வி.பியின் கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது தொடர்பான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளார்.
இப் பிரேரணையானது பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் விவாதத்ற்கு உட்படுத்தப்பட்டு, வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. இவ் வாக்கெடுப்பின் போது ஜே.வி.பி. எதிர்த்து வாக்களிக்கவுள்ள அதேவேளை பாராளுமன்றத்தில் எதிர் தரப்பினராக செயற்படவுள்ளதாக கூறியுள்ள ஐ.ம.சு.மு.வின் மாற்றுத் தரப்பினரின் தீர்மானம் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என நம்பப்படுகின்றது.
கூட்டு அரசாங்கமே என்கிறது ஜே.வி.பி.
அரசியலமைப்பு சட்டத்தின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதன் பிரகாரம் தேசிய அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்திலேயே அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தற்போது அமையப் பெறுகின்ற அரசாங்கமானது இரண்டு கட்சிகளால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள கூட்டு அரசாங்கமே தவிற அதில் தேசிய அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட முடியாதது என்றும் கூறியுள்ளது.
மேலும் தேசிய அரசாங்கம் அல்லாத கூட்டு அரசாங்கத்தில் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க சட்டத்தின் பிரகாரம் இடமில்லை என்ற வாதத்தையும் ஜே.வி.பி. முன்வைத்துள்ளது. இதனடிப்டையிலேயே தாம் அமைச்சரவை அதிகரிப்பினை தாம் எதிர்ப்பதாகவும் அக் கட்சி கூறியுள்ளது.








