போரின் வலி எனக்குத் தெரியும்': சாந்தி சிறிஸ்கந்தராசா
இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலையடுத்து இன்று முதலாம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 13 பேர் மாத்திரமே பெண்கள். அவர்களில் விஜயகலா மகேஸ்வரன், சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகிய இரண்டு பேரே வடக்கு கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிகாரியாக பணியாற்றிய திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, வன்னித் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18 ஆயிரத்து 80 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆயினும் 313 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்.
இருந்தபோதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்திருந்த 2 தேசிய பட்டியல் உறுப்பினர்களில் ஒருவராக இவரை கட்சியின் தலைமைப்பீடம் நியமித்ததன் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்.யுத்த காலத்தில் அரச பணியில் இருந்த போது ஷெல் வீச்சு காரணமாக படுகாயமடைந்து ஒரு காலை இழந்த இவர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
துணுக்காய் பிரதேசத்தில் மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்து ஒளிரும் வாழ்வு என்றொரு அமைப்பை உருவாக்கி அதனைச் செயற்படுத்தி வருகின்றார்.யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்கள் போன்றவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியே தனது அரசியல் நடவடிக்கைகள் அமையும் என்று சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.
‘மக்களின் உடல், உள வலியை உணர்ந்தவர் என்ற அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்றும் அவர் கூறினார்.