சர்வதேச விசாரணை விடயத்தில் முரண்பட்டுள்ள கூட்டமைப்பினர்
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கடந்த சில வருடங்களாகவே கோரி வரும் நிலையில் தற்போது அந்த சர்வதேச விசாரணை தேவையில்லையென்றும் உள்ளக விசாரணையின் மூலம் இந்த விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உயிர்களையும், உடைமைகளையும் இழந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக அல்லல்பட்டனர். பெருமளவானோர் காணாமல் போயினர். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாயினர். இவ்வாறு தமிழ் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்திருந்தனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பல மாதங்களாக அகதி முகாம்களில் அல்லல்பட்டனர்.
இவ்வாறு அவலப்பட்ட தமிழ் மக்கள் தமக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்ற மன நிலையிலேயே இருந்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்த பிரதேசங்களை பார்வையிட்டு அதிர்ச்சி தெரிவித்திருந்தார். அத்துடன் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயற்பாட்டினை மேற்கொள்ளவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமானது பொறுப்புக்கூறும் செயற்பாட்டிலிருந்து தவறியமையினால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தது. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு, 2014 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளையும் மேற்கொண்டு கடந்த மார்ச் மாதம் அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவிருந்தது. ஆனால், இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டிருந்தது.
இம்மாதம் 30 ஆம் திகதி இந்த அறிக்கை வெளிவரவிருக்கிறது. புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து சர்வதேச விசாரணையை நடத்தாது உள்ளக விசாரணைக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் தற்போது தீர்மானித்துள்ளன. இதற்கிணங்க இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா பிரேரணை ஒன்றினை இம்முறை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச விசாரணை வேண்டுமென்று இதுவரை கோரிவந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறியுள்ளதாகவே தெரிகின்றது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவே தெரிவிக்கின்றது. ஆனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகளான ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகியன சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். உள்ளக விசாரணையின் மூலம் எதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதில் ஆணித்தரமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணை மீது தமக்கு நம்பிக்கை இல்லையென்றும் எனவே யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்படவேண்டுமென்று இவர்கள் கோரியுள்ளனர்.
இதேபோல் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சர்வதேச விசாரணையே வேண்டுமென்பதில் ஆணித்தரமாக உள்ளார். கடந்த வாரம் வடமாகாணசபையில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் வடமாகாண சபையில் கொண்டுவரப்பட்ட இன அழிப்பு பிரேரணை மற்றும் சர்வதேச விசாரணை பிரேரணை என்பவற்றின் பிரதிகள் வடமாகாண முதலமைச்சரின் உறுதிப்படுத்தலுடன் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் பங்குபற்றும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்தளவிற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நிலைப்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இருந்து வருகின்றார். சர்வதேச விசாரணை தொடர்பில் கூட்டமைப்பினர் இவ்வாறு முரண்பட்டு நிற்பதானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை மலினப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எக்ஸ்பிரஸ் செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட போர்க்குற்ற வழக்குகளை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரும்புவதாகவும், மற்றொரு சர்வதேச விசாரணையை கூட்டமைப்பு நாடவில்லையென்றும் தெரிவித்திருக்கின்றார்.
இதேபோல் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இவ்விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையில் சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்றவிசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை அரசாங்கத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து உள்ளக விசாரணைகளும், உண்மைத்தன்மையற்றவையாகவே இருந்துள்ளன. எனவே, சர்வதேச விசாரணையொன்றை நடத்தவேண்டுமென்று கோரும் உரிமை மக்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.
தமிழரசுக்கட்சியை சேர்ந்த இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஏற்கனவே சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது போன்றும், இனிமேல் சர்வதேச தலையீட்டில் உள்ளக விசாரணை நடத்தப்படல் வேண்டும் என்ற தொனிப்பொருளிலுமே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எதிர்காலத்திலும் சர்வதேச விசாரணையே நடத்தப்படவேண்டும் என்றும் கோரிவருகின்றன. இந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துப் போராட்டங்களும் இடம் பெற்று வருகின்றன.
இதனைவிட சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்று முதல் பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இந்த பாதயாத்திரை இடம்பெறும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கின்றார்.
யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு சர்வதேச விசாரணையே சிறந்தது என்று இதுவரை கோரி வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போது இந்த விடயத்தில் முரண்பட்டுள்ளமை கவலையளிக்கும் விடயமேயாகும். எனவே இவ்விவகாரத்தில் இனியும் முரண்பாடுகளை அதிகரிக்காது ஒருமித்த செயற்பாட்டிற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமைகள் முன்வரவேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டமைப்பினர் செயற்படவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்








