Breaking News

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தம்! இலங்கைக்கு இந்திய மத்திய அரசு அழுத்தம்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு யோசனைகளை முன்வைக்கவேண்டும் என இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி சென்றுள்ள நிலையில் இந்த அழுத்தம் இந்திய மத்திய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் 1987ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புதுப்பித்து செயற்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் புதுடில்லி தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்கனவே இது தொடர்பாக பேசப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது என்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இரு நாடுகளும் இணைந்து தீர்வை முன்வைப்பது தொடர்பாகவும் யோசனைகள் முன்வைக்கப்படும் எனவும் புதுடில்லி தகவல்கள் குறிப்பிட்டன.

அதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்க முடியாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எற்கனவே தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பல அதிகாரங்கள் நாடாளுமனத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளன. காணி பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத்தடியாலும் தொட்டுக்கூட பார்க்கமாட்டோம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2006ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.