தமிழ் தேசியக்கூட்டமைப்பு 15 வருடங்களாக யாப்பு இன்றி கட்டுக்கோப்பின்றி செயற்படுகின்றது
தமிழ் தேசியக்கூட்டமைப்பு 15 வருடங்களாக யாப்பு இன்றி கட்டுக்கோப்பின்றி செயற்படுகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் சி.சிவமோகன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள முத்தையா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி. கடந்த 30 வருடகாலத்தில் ஏற்பட்டிருக்கின்ற சொத்தழிவுகள், உயிரழிவுகள், காணாமல்போனோர் விவகாரம், நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விவகாரம், மீள்குடியேற்றம், இராணுவம் அபகரித்துள்ள காணி விவகாரம் போன்றவை எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் மிகுந்த சவால்நிறைந்த பணிகளாக இருக்கப் போகின்றன.
ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியும் இணைந்து ஒரு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றார்கள். ஆகவே இந்த தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு காத்திரமான பணியை முன்னெடுக்கும் என நம்புகின்றேன்.
எமது அன்றாடப்பிரச்சினைகளிலிருந்து நிரந்தர தீர்வை நிரந்தரமான அபிவிருத்தியை காண்பதற்காக இன்னும் நாங்கள் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கின்றது. நாங்கள் ஒன்றுசேர்ந்து உழைக்கின்ற போது நாங்கள் அந்த இலக்கை அடைய முடியும்.
இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் எங்களில் இருக்கக்கூடிய ஒரு சிலர் கூறுகிறார்கள் சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்று முடிந்துவிட்டது.
மீண்டும் எதற்கு ஒரு சர்வதேச விசாரணை என மக்களை குழப்புகிறார்கள். எம்மில் சிலர் இப்படியான கருத்துக்களை தெரிவிப்பது எமக்கு மன வேதனையளிக்கிறது என தெரிவித்தார்.
தமிழ் மக்களை கொலை செய்தவர்களே விசாரணை செய்தால் எமக்கு நீதி கிடைக்காது. மஹிந்த ராஜபக் ஷ காலத்திலே ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அந்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எந்த நீதியும் வழங்கப்படவில்லை. கடந்த 60 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்படவில்லையென்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்.
யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கணவன்மார்களை தேடித்திரிகிறார்கள்.
இவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தவேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பானது பலமான கட்சியாக மாற்றம்பெற பதிவுசெய்யப்பட வேண்டும். அதற்காக குரல் கொடுக்க வேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்றைக்கு 15 வருடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு யாப்பு இல்லை. எந்தவிதமான பலமான ஒரு கட்டமைப்பும் இல்லை. கூட்டமைப்பின் பேரால் ஒரு கட்சி தன் நலன்சார்ந்து செயற்படுவது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் மனக்கசப்புக்களை ஏற்படுத்தியி ருக்கிறது. ஆகவே தமிழரசுக் கட்சிக்கும் தலைவர் சம்பந்தனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.








