மஹிந்த அணிக்கு சவால் விடும் செல்வம்
மீண்டுமொரு ஆயுத கலாச்சாரத்தையும் அதற்கான தேவையையும் மகிந்த அணியினர் உருவாக்கி வருவதாகவும் அதற்கும் தாம் தயாராகவே இருப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இரா சம்மந்தனை எதிர்கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலக்குமாறு கையொப்பங்கள் சேகரிக்கப்பட்ட மகஜரானது மஹிந்த அணியினரால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்ககப்பட்டமை தொடர்பில் ஐபிசி தமிழ் வினவியமைக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இனவாதம் கக்கிவரும் குறித்த அணியினருக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் நாடாளுமன்றத் தேர்தலின் மூலமாக சிறந்ததோர் பாடத்தை கற்பித்ததாகவும் எனினும் அவர்கள் ஆயுத கலாச்சாரம் ஒன்றை மீண்டும் தோற்றுவிப்பதற்கு எத்தணித்து வருவதாக தெரிவித்தார்.
இனவாதத்தை துாண்டும் இவ்வாறான செயல்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கண்டனங்களையும் தெரிவித்த அவர் இவர்கள் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.
தமிழினத்தின் மன்னிப்பபை எப்போதுமே பெற முடியாத இவர்கள் தமது சுயநல அரசியல் நிலைப்பிற்காக இனவாதம் பேச வேண்டிய தேவை இருப்பதை அறிந்து செயற்படுவதாகவும் இனவாதிகள் யாரென்பதை மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தும் இவர்களின் செயற்பாட்டை வன்மையாக எதிர்பதாகவும் தெரிவித்தார்.








