Breaking News

சர்வதேச விசாரணையைக் கோரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு! சம்பந்தனிடம் விளக்கம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விளக்கம் கோரப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பை எற்றுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் இறைமைக்கு மாறாக செயற்படக்கூடாது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அமைப்புகளினால் நடத்தப்படும் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை சர்வதேச விசாரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவில்லை என்றும் உள்ளக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.எவ்வாறாயினும் சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா என்பத குறித்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான நிலைப்பாட்டை வெளியிடவில்லை.

கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா சர்வதேச விசாரணை அல்ல சர்வதேச நீதிமன்ற விசாரணையே தேவை என்று ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால் சர்வதேச ஆதரவுடன் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார்.

இதேவேளை உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வற்புறுத்தியதாக வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.