Breaking News

யாழில் குடும்பஸ்தர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தி லிருந்து நீண்ட காலத்துக்கு முன்னர் விலகியிருந்த ஒருவரை பயங்கர வாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கச்சாய் தெற்கு, கொடிகாமம் எனும் பகுதியில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு நேவிநாதன் (42) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவராவார். கைதுசெய்யப்பட்டவர் 1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். பின்னர் அவ்வமைப்பிலிருந்து விலகி திருமணம் செய்து வன்னியில் வசித்து வந்துள்ளார். போர் முடிவுற்றதும் யாழ்ப்பாணம், கச்சாய் பகுதியில் குடியேறிய குறித்த நபர் கடற்றொழில் செய்து வசித்து வந்துள்ளநிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த நபரின் வீட்டுக்கு கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரை கைதுசெய்து கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமைக்கான துண்டொன்றை வழங்கியிருக்கின்றனர். அத்துண்டில் கைதுசெய்யப்பட்டவர் நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்டவரின் குடுபத்தினரிடம் மீண்டும் வந்த பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நான்காம் மாடிக்கு வந்தால் அவரைப் பார்க்க முடியும் எனத் தெரிவித்து சென்றிருக்கின்றனர். இதேவேளை ஏன் கைதுசெய்யப்பட்டா என்ற காரணம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என கைதுசெய்யப்பட்டவரின் குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர்.