அறிக்கையை அரசாங்கம் நிராகரித்தது-ஐ.நாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தொடரும் அச்சம்
போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற முறையை ஸ்ரீலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக நிராகரித்துள்ள நிலையில் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது
தொடர்பாக கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.
உள்ளக விசாரணைதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியதுடன் மனித உரிமை பேரவை ஆணையாளரின் பரிந்துரைகளையும் நிராகரிததார்.
இந்த நிலையில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஜெனீவா மனித உரிமைப் பேரவை எவ்வாறு மேற்கொள்ளப்போகின்றது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அந்த 30 வருட ஆயுதப் போராட்ட காலங்களில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பாலியல் வல்லுறவுகள் நடைபெற்றன.
அவை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஸ்ரீலங்காவில் அவ்வப்போது பதவியில் இருந்த அரசாங்கங்கள் நியமித்த விசாரணை ஆணைக்குழுக்கள் சரியாக செயற்படவில்லை. அல்லது அந்த ஆணைக்குழுக்கள் வழங்கிய அறிக்கைகள் அப்படியே குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டன என்றும் கூறலாம்.
83ஆம் ஆண்டில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற 2005 ஆம் ஆண்டுவரை ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் குறைந்தது ஏழு ஆணைக்குழுக்கள் வரை நியமிக்கப்பட்டன.
சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக பதவி வகித்தபோது போரில் இடம்பெற்ற பாதிப்புகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று, தமக்கு அதிகாரங்கள் வழக்கப்படவில்லை என கூறி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திவிட்டு கலைந்து சென்றது.
இறுதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2010இல் நியமித்த எல்எல்ஆர்சி எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குவின் அறிக்கையை கூட அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்சவே அதனை நிராகாித்தாா்.
அது மாத்திரமல்ல காணாமல்போவோரை கண்டறியும் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை கூட கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆக தாங்களே நியமித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை தாங்களே நிராகரித்த வரலாறு ஸ்ரீலங்காவில் மட்டும்தான்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய உள்ளக விசாரணைப் பொறிமுறையை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது என்று கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர்கள் அனைத்தையுமே நிராகரிப்பதன் அர்த்தம் என்ன என்றும் கேள்வி தொடுத்தனர்.
அதாவது யுத்தத்தில் போா்க்குற்றங்கள் நடைபெறவில்லை, மனித உரிமை மீற்ல்கள் இடம்பெற்றவில்லை, பாலியல் வல்லுறவுகள் மற்றும் காணாமல்போதல் கடத்தல் இரகசிய முகாம்கள் என்று எதுவுமே இல்லை. ஆக ஸ்ரீலங்கா படைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப போரில் ஈடுபட்டார்கள் என்று பிரதமர் ரணில் கூறுகின்றாரா?
1983ஆம் ஆண்டில் இருந்து எந்த ஒரு விடயதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லையென 2010இல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆகவே சர்வதேச தலையீடுகள் தேவையில்லை என்றால் புலிகளை அழிப்பதற்கு மட்டும் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உதவிகள் ஏன் அரசாங்கத்துக்கு தேவைப்பட்டன?
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் மூலமாகத்தான் எதையும் செய்ய முடியும் சர்வதேச சட்டங்கள் ஆலோசணைகள் தேவையில்லை என்றால் அந்த நாடாளுமன்றம் ஏன் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை பகிராமலும், சிங்களம் அல்லாத தேசிய இனங்கள் இங்கு வாழ்கின்றன என்பதை இன்னமும் ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கின்றது?
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை தமிழர்கள் இன்னமும் நம்பவில்லை. போர் 83ஆம் ஆண்டு போர் ஆரம்பித்ததன் நோக்கமே அதுதான். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வையுங்கள் என தமிழர்களை எவ்வாறு கோர முடியும்?
இந்த இடத்தில் ஐக்கிய நாடுகள் சபையும், ஜெனிவா மனித உரிமைச் சபையும் தோல்வியடைந்துவிட்டன. ஆக தங்கள் தங்கள் அரசியல் பொருளாதார நலன்களை தக்கவைப்பதற்காக மாத்திரமே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்துகின்ற என்ற முடிவுக்கு வரலாம் சுட்டிக்காட்டியுள்ளனா்.
ஆகவே உலகில் விடுதலை வேண்டி நிற்கின்ற தேசிய இனங்கள் அரசியல் அநாதைகள்தான் என்ற புதிய கோட்டுபாடு ஒன்று உருவாவிட்டது. அதற்கு தமிழர்கள் உதாரணமாவிட்டமைதான் சோகமானது கூறுகின்றனா்.