ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70ம் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 15ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க உள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி புனித பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் ஆண்டகை உரையாற்ற உள்ளார். இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 30ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளனர். எதிர்வரும் 30ஆம் திகதி அமெரிக்க நேரப்படி முற்பகல் 9.45க்கு ஜனாதிபதி உரையாற்றுவார் எனத் தெரியவருகிறது.
பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்திரமாக உலகின் பல நாடுகளது தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமர், இந்திய பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட பலருடன் சந்திப்புக்களை நடாத்தும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.








