Breaking News

சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!

இலங்கையின் உள்நாட்டு போரில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்கு வதற்கான பொறிமுறையில், சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. 

“இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டிய தருணம் வந்துவிட்டதை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகின்றது என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிசர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச பங்களிப்புடனான நீதிபொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதி வழங்குவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் என்ற முக்கியமான விடயத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது. 

இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. எனினும் நேர்மையான நீதி செயற்பாடுகளில் உள்நாட்டு அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் காணப்படுவதை உறுதி செய்வதற்கு சர்வதேச பங்களிப்பும், கண்காணிப்பும் அவசியம். 

இலங்கையில் உடனடியாக முன்னெடுக்கவேண்டிய சீர்திருத்தங்களுற்கான உறுதியான வேண்டுகோளாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளது. உத்தேச தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்படாத போதிலும், அனைத்து பரிந்துரைகளும் அமுல்படுத்தப்பட்டால் கடந்த கால சம்பவங்களுக்கு நீதி வழங்கக்கூடிய ஓர் நிலைமை ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.