Breaking News

எல்லாம் சோட் அவுட்-புளியடிப் பூராயம்(காணொளி)

வணக்கம் என்ன தம்பிமார் எப்பிடி இருக்கிறீங்கள்?
எலெக்சன் நேரம்
எங்களுக்கு பாடை கட்டப்போறம் எண்டு ஒரே கூச்சலா இருந்திச்சு. எலெக்சன் முடிஞ்ச கையோட பாராட்டு விழா எண்டு ஊர் ஊரா கூப்பிடுறாங்களடா.. என்ன செய்யமுடியும்? பாராட்டுவிழாவுக்கு எண்டு தேசியபட்டியல்ல ஒராள கொண்டுவரலாமோ?

அதுதான் நானே நேரில போறன் என்ன எலெக்சன் முடிய கொஞ்சம் அமைதியா இருக்கும் எண்டு பார்த்தா. இன்னும் முடியிறபாடா காணல்ல. நாங்கள் சீவியில கொஞ்சம் சூடாக இருக்கிறம். சிறிதரனும் சிவசக்தி ஆனந்தனும் என்னில சூடா இருக்கினம். திருக்கோணமலையில பாராட்டுவிழா வைக்க அதுக்கு மூண்டுபேரும் வரல்லயடா சிறியர் அதிகூடின விருப்புவாக்கு எடுத்தவராம். அதால அவற்ற சொல்ல கேக்கவேணுமாம். எங்களுக்குத்தான் அதிகூடின விருப்பு வாக்கு எடுத்தால் பிடிக்காதெண்டு தெரியும்தானே (பொறுங்கோ கண்ணை மூடிக்கொண்டு சிரிக்கிறன்)

உங்கட அனந்தி அக்காவும் கூடவோட் எடுத்தவதானே. மாகாணசபை எலெக்சனில யாழ்ப்பாணத்தில மட்டுமே அந்தளவு வோட் எடுத்தவை தானே விக்கியரும் அனந்தியும். ஆனாலும் பாருங்கோ – கட்சியின்ர கட்டுப்பாட்டுக்க நிக்காட்டி நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்பம் என்ன? ஓமோம் கட்சியின்ர நடவடிக்கை எண்டா கனக்க யோசிக்க கூடாது. நான்தான் தம்பி முடிவெடுக்கிறனான். அதிலையென்ன பிழை அனந்தி அக்கா மட்டுமில்லை இப்ப சிவி விக்கினேஸ்வரனும் உணர்ச்சிவசப்பட்டு நிக்கிறார்.

நானும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தா இந்தப்பிரச்சனையை இவ்வளவு காலமும் இழுத்து இழுத்து வைச்சிருப்பனோ? 65 வருச அரசியல்ல பழம் திண்டு கொட்டை போட்டவன் தம்பி.


ஏன் கயேந்திரனுக்கு எத்தினை வோட் விழுந்தது. கள்ளவோட்டு நொள்ளவோட்டு எண்டு போனாலும், கூடவோட்டு அவனுக்குத்தானே தம்பி விழுந்தது. அந்த நேரத்தில இயக்கப்பெடியள் சொன்னவுடன சனம் அப்பிடி போட்டுது என்ன. ஆனா எங்களுக்கு இதுகள் சரிவராது. கயேந்திரன அனுப்பினம்.

அனந்தி அக்காவை அடக்கிவைச்சம். சீவியர் துள்ளுறார். இப்ப அவருக்கும் முடிவெடுக்கப்போறம். இப்பிடி பார்த்தா அடுத்ததா சிறியரிலதான் கை வைக்கவேணும். எதுக்கும் மாவை ஒரு சொல் சொல்லட்டும் எண்டு இருக்கிறன். எனக்கு ஏற்கனவே இன்னும் இரண்டு மூண்டு அலுவல் இருக்கு.


நடுராத்திரியில் கருணாநிதி கோலடிச்சு தன்னை விட நான் கெட்டிக்காறன் எண்டு சொல்லுறாரடா? தன்ர அடுத்த படத்திற்கு கதை வசனம் எழுதக்க என்ன கோடி காட்டுறதா சொன்னவர். அவர் என்னை கோடி காட்டுறாரோ தன்ர குடும்பத்திற்கு கோடி கொட்டுறாரோ தெரியேல்ல எதிர்கட்சி தலைவர் எண்டவுடன எல்லாரும் வாழ்த்து அனுப்புகினம் என்ன?

எலெக்சன் முடிஞ்சவுடன சுரேசர் நல்ல கடுப்பில இருந்தவர். சுரேசர் செல்வத்தார், சிவாஜிலிங்கம், அடைக்கலநாதன் எல்லாரும் சேர்ந்து இரகசிய கூட்டம் போட்டவையாம். உங்களுக்கு தெரியுமோ கிடைச்ச 14 சீற்றில எட்டுத்தான் தமிழரசுக்கட்சி.

தேசியப்பட்டியல் இரண்டையும் அவையிட்ட தூக்கி கொடுத்தா பிவ்ரி பிவ்ரி 50 க்கு 50 எண்டேல்லே வந்திடும் நாளைக்கு வந்து கூட்டமைப்பு பதியவேணும் எண்டு ஒரே பிடியா நிப்பாங்களடா அதுதான் எல்லாரையும் உங்கட விருப்பங்களை எழுதி தாங்கோ எண்டு வாங்கி குப்பையில போட்டுட்டு இரண்டு பேரையும் தமிழரசு கட்சியில போட்டிட்டம் என்ன இதுதான் அவையளுக்கு கடுப்பு. இரகசியமாக கூட்டம் போட்டு கதைச்சவையாம். சுமந்திரன்தான் நல்லதொரு ஐடியா கொடுத்தான்.

செல்வத்தார கொண்டுபோய் ஈபிடிபி சந்திரகுமார் இருந்த இடத்தில இருக்க சொல்லி ரணிலிட்ட சொல்லி இருக்கவைச்சிட்டம் என்ன? இப்ப நான் எதிர்கட்சி தலைவர். அப்பாடா எண்டு இருக்க திரும்பவும் சத்தம் போடுறியள் தம்பி. இப்ப சர்வதேச விசாரணை வரவேணும் எண்டு கூச்சல் போடுறாங்கள். ஆனா அமெரிக்ககாரன் என்ன சொல்லுறான் எண்டு பாக்கவேணும் எல்லோ தம்பி. அப்ப நாங்கள் என்ன சொல்லுறம் எண்டா சர்வதேச விசாரணை முடிஞ்சுது.

ஆர் ஆர் இமெயிலில சாட்சி கொடுத்தியளோ அவ்வளவும் தான் சர்வதேச விசாரணை. ஊருக்கு வந்து நேரில வந்து விசாரிக்கவேணும் எண்டா மைத்திரி ஓமெண்டு சொல்வாரோ. அதாலதான் நாங்கள் சொல்லுறம் இவ்வளவு நாளும் நடந்தது சர்வதேச விசாரணை. இரண்டாவது விசாரணை தேவையில்லை. எப்பிடி என்ர ஐடியா? உடன மாவையரும் விழுந்தடிச்சு ஓமோம் அது எப்பவோ முடிஞ்ச காரியம் எண்டு யோகர் சுவாமி கணக்கா சொல்லித்திரியுது மனிசன். இப்பதான் தம்பி யோசிக்கிறன்.

2016 இல ஏன் தீர்வு காணவேணும்? இப்பவே கண்டுட்டம் தானே. வடக்கு கிழக்கு இணை இணை எண்டு எத்தினைதரம் கத்தியிருப்பம். ஆனா பாருங்கோ அது ஓல்ரெடி இணைஞ்சுதானே இருக்கு. நிலத்தால இருக்கிற இணைப்பை எந்த பலத்தாலையும் பிரிக்கமுடியுமோ?(கையை பொத்திக்கொண்டு சொல்லுறன்) அடுத்தது என்ன? ஓமோம் சமஸ்டி தீர்வு. தம்பி இண்டைக்கு இலங்கைத்தீவில 9 மாநிலங்கள் இருக்கு. அதுக்கு பேர் தான் மாகாணசபைகள். ஆனா நாங்கள் ஏன் மாநிலங்கள் எண்டு சொல்லக்கூடாது.

இப்ப காணி அதிகாரம் வந்திடும். வந்திடும் எண்டா என்ன? வரும் ஆனா வராது. ஆமிக்கு காணிவேணும் எண்டு விக்கியரிட்ட கேட்டவங்களாம். இவர் மாட்டன் எண்டிட்டாராம். அவங்கள் கொழும்பில இருந்து பெமிசன் எடுத்திட்டாங்கள். அப்ப என்ன சொல்லவாறன் எண்டா நாட்டுவிசயம் எண்டு அவங்கள் காணி கேட்டா நாங்களாகவே கொடுத்திட்டம் எண்டா எங்களிட்ட தான் காணி அதிகாரம் இருக்கும் எண்டு சனத்துக்கு சொல்லுறது.

பிளவுபடாத நாட்டுக்குள்ள தீர்வு எண்டு எத்தினை தரம் திருப்பி திருப்பி சொன்னாலும் நாட்டு விசுவாசம் இல்லாமல் இருக்கிறது சரியோ தம்பி? அடுத்தது பொலிசு. முதலமைச்சர்மாருக்கு பதில் சொல்லக்கூடிய பொலிசா மாத்தப்போறம். பிறகென்ன? காணாமல்போன ஆக்கட பிரச்சனையோ? தம்பி காணாமல் போன எல்லாருக்கும் மரணசான்றிதழ் கொடுக்கிறதுக்கு மைத்திரி ஐயா ஓமெண்டிட்டார்.

அந்த சேட்டிபிக்கற் ஓட கொஞ்ச காசும் கொடுப்பம் என்ன? ஒரு சைன் வைச்சா போதும். என்ன சைன் எண்டுதானே கேக்கிறியள். இனிமேல் காணாமல் போயிட்டினம் எண்டு சொல்லக்கூடாது. அவையள் உண்மையில செத்துபோய்ச்சினம் எண்டு சைன் வைச்சா போதும். அது எங்கட அப்புகாத்து சுமந்திரன் எப்பிடியும் சைன் வாங்கிப்போடுவான்.

சுமந்திரன் தன்ர மென்வலுவை காட்டினான் எண்டால் எங்கட சனமே ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு தாங்களாவே சொல்லுங்கள் என்ன? (சிரிக்கிறன் பொறுங்கோ?) அப்ப வேறையென்ன பிரச்சனை தம்பி? எல்லாம் சோட் அவுட். அப்ப நான் போட்டு வரட்டோ.