சர்வதேச விசாரணை ஒரு கற்பனை நாடகம்
பாத்திரங்கள்:இரா.ச, மந்திரன், சேனா, தமிழ் மகன் 1, 2, பார்வையாளர்கள்
பாட்டு-1:வென்று விட்டோமே... நாங்கள் வென்று
விட்டோமே...
பாட்டு-2:யாரை வென்றீர்கள்... நீங்கள் யாரை
வென்றீர்கள்?
பாட்டு-1:தமிழ் வாக்காளர்களை நாங்கள் வென்று
விட்டோமே... வென்று விட்டோமே...
தமிழ் மக்கள்:நதியயல்லாம் வற்றாத கடலைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த கடலே வற்றிப் போனால்...
இரா.ச:மந்திரா! பதவி கிடைத்ததில் இருந்து எனக்கு எதுவுமே புரியவில்லை. உறக்கமுமில்லை. திருமலையில் என் தலையில் மகுடம் வைத்தார்கள் ஏன் மந்திரா?
மந்திரா:குறைந்த வாக்குகளுடன் வெற்றி பெற்ற நீங்கள் தலைவராகி விட்டீர்கள். ஆனால் சேனா கட்சித் தலைவராக இருந்தும் எதிர்த்தலைவர் பதவியை இழந்தார் பார்த்தீர்களா? இதற்குத்தான் சொல்வது நான் உங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று.
இரா.ச:அட, முன்பு தந்தையை அமிர்தான் வழி நடத்தியவர். அதுபோல என்னை நீ வழிப்படுத்துகிறாய். நீ இல்லாமல் நானில்லை... நானில்லாமல் நீயில்லை... ஹ... ஹ...
அது சரி மந்திரா! சர்வதேச விசாரணை...?
மந்திரா:அது எப்பவோ முடிந்த காரியம்.
இரா.ச:இது செல்லப்பசுவாமிகள் சொன்ன வாக்கியமாயிற்றே
மந்திரா:நாங்கள் இப்படிச் சொல்லுவம் என்பதை அவர் முன்கூட்டியே சொல்லியுள்ளார். அவ்வளவுதான்.
இரா.ச:எதுவாக இருந்தாலும் மந்திரா! சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று நீ கூறுவதை யாரா வது ஆமோதிக்க வேண்டுமல்லவா? அதற்கு யார் பொருத்தம்?
மந்திரா:எங்கள் அண்ணர் சேனாதி என்று சங்கே முழங்கு.
(கதவு தட்டப்படுகிறது)
இரா.ச:யாரங்கே?
பாதுகாவலன்:ஐயா!... சேனாதி ஐயா!...
இரா.ச:வரச் சொல்லு..., வரச் சொல்லு.
சேனா:வணக்கம் தலைவரே!
இரா.ச:வணக்கம் சேனா. இந்த சர்வதேச விசாரணை பற்றி உங்கள் கருத்து.
சேனா:ஐயோ! கடவுளே! யாருக்குச் சர்வதேச விசாரணை. நீங்கள், நாங்கள் எந்தக் குற்றமும் செய்ய வில்லையே.
இரா.ச:அட! தேர்தல் வெற்றிப் புளகாங்கிதத்தில் உனக்கு எல்லாம் மறந்து போச்சுது போல...
(இரா.ச சேனாவின் காதில் ஏதோ இரகசியமாக சொல்லுகிறார்)
மாவை:சத்தியமாய் எனக்கு ஒன்றும் தெரியாது.
இரா.ச:அதுபோதும்... அதுபோதும்...
மந்திரா! சேனாதிக்குச் சொல் அவன் ஆமோதிப்பான்.
(சேனாவின் காதில் மந்திரன் ஏதோ சொல்கிறார்.)
சேனா:என் அருமைத் தமிழ் மக்களே! சர்வதேச விசாரணை எப்பவோ முடிந்து விட்டது. இனி சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும்.
(தமிழ் மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு கட வுளே ஒன்றும் விளங்கவில்லையே என்கின்றனர்.)
தமிழ் மகன் 1:அப்ப சர்வதேச விசாரணை முடிஞ்சு போச்சுதோ?
தமிழ் மகன் 2:முடிந்தது என்றால் முடிந்தது. முடிய வில்லை என்றால் முடியவில்லை.
தமிழ் மகன் 1:வடக்கு மாகாண சபையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்திக் கொண்டு வந்த தீர்மானம்?
தமிழ் மகன்2:ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே நமக்குச் சொந்தமடா...
(கோரஸ்) தகிட... தகிட... தகிட...
வேண்டும்... வேண்டும்... சர்வதேச விசாரணை வேண்டும்... வேண்டும்... வேண்டும்... சர்வதேச விசா ரணை வேண்டும்...
இரா.ச:மந்திரா என்ன கோசம் அங்கே?
மந்திரா:சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையயழுத்துப் போராட்டமாம்.இரா.ச:அட, நாசமறுப்பு!
மந்திரா:ஐயா! உங்கட கடைசி ஆசை நிறை வேறிற்று. அமிர் மாதிரி வரவேணும் எண்டு நினைச்சியள். அது மாதிரி ஆக்கிப் போட்டன். இனி எந்தப் போராட்டம் என்றாலும் எங்களுக்கு என்ன?
இரா.ச:மந்திரா! அப்படிச் சொல்லாதே. அடுத்த தேர்தலிலும் நான் வெல்லவேணும்.
மந்திரா:அப்ப நாங்கள் எப்ப உங்கட இடத்துக்கு வாறது? இப்படியே தேர்தலில் போட்டியிடப்போறி யளோ!
இரா.ச:மந்திரா! எனக்குப் பயமாய் இருக்கு. சனம் எல்லாம் கையயழுத்துப் போடுவதில கடும் ஆர்வம் காட்டுகினம். எங்கட எதிர்காலம்...?
மந்திரா:இதுக்கேன் ஐயா! பயப்படுகிறியள். உங்களுக்குத் தெரியாத சிங்க வாகனமோ! காளி ஆத்தாவோ! கனவோ! ஒன்றை எடுத்து விடுங்களேன்.
இரா.ச:ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்திய போது நான் சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்தனான். அப்பவே எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரலாம் என்று ரணில் என்ர காதில சொன்னவர். சொன்னமாதிரி அந்தாள் செய்து போட்டுது.
மந்திரா:நீங்கள் சிங்கக் கொடி தூக்கியதை பலர் விமர்சித்தாலும் திருகோணமலையில் இருக்கின்ற காளியை முன்னிறுத்தி சிங்கக் கொடி-சிங்க வாகனம் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி தப் பித்துக் கொண்டீர்கள். எங்கட சனங்களும் நீங்கள் சிங்கக் கொடி ஏற்றியபோது-ரணிலோடு கூட்டு வைத்தபோது ஓரளவுக்கென்றாலும் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எங்களுடைய தமிழ்ச் சனங்கள் நம்பினால் நம்பினதுதான்.
இரா.ச:ஹ... ஹ... மந்திரா நான் சிங்கக் கொடி பிடித்ததை சொல்லிக் காட்டுகிறீரா அல்லது குத்திக் காட்டுகிறீரா? எதுவாக இருந்தாலும் உன்னுடைய ஞாபக சக்தி யாருக்கு வரும்? எனினும் கையயழுத்துப் போராட்டம்...பயமாக இருக்கு.
மந்திரா:எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. நீங்கள் தாளத்தை மாற்றிப்போடுங்கள்.
இரா.ச:சர்வதேச விசாரணை அவசியம்... உள்ளூர் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் சர்வதேச விசாரணையை வலி யுறுத்துகி றோம். மந்திரா:சபாஷ்... இது போதும் ஐயா! அடுத்து தேர்தலிலும் நாங்கள்தான்... (நீங்கள் இதுவரை நேரமும் பார்த்து மகிழ்ந்தது சர்வதேச விசாரணை நாடகம்) பார்வையாளர்கள்:நல்ல நாடகம் இரா.ச நடிப்பு பிரமாதம். மந்திரன் மிகத் திறம். இனியும் நாங்கள் ஹவுஸுக்குத்தான் புள்ளடி போடுவம். ஏனென்றால் அவர்கள் தானே எங்களை ஏமாற்றுவினம். அப்ப தானே ஏமாறுகிற எங்கட தலைவிதி நடந்தாகும். நல்லம் நல்லம்.








