உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது பற்றி இன்னும் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்பதால், எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு அமைய இந்த தேர்தல் தொகுதிவாரியாக நடத்தப்பட வேண்டும்.எனினும் தொகுதி நிர்ணயம் நியாயமான முறையில் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளதால், தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளது.
இதற்கு பல மாதங்கள் செல்லக் கூடும் என்பதால், எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தலை நடத்த முடியாது என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார அடிப்படையில், நடத்துவதாயின் எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியும். எனினும் தொகுதிவாரியாக இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருந்து வருகிறது.இந்த நெருக்கடியான நிலைமை காரணமாக மார்ச் மாதம் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் கட்டாயம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.








