ஜெனீவா தீர்மானத்தின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் - சோமவன்ச
ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், கட்சியின் முன்னாள் பிரச்சார செயலாளரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் மற்றும் இலங்கையை சிக்க வைக்கும் காலனித்துவ ஆட்சியாளர்களின் முயற்சி குறித்து இருவரும் பேச்சு நடத்த உள்ளனர்.எதிர்வரும் நாட்களில் விமல் வீரவன்சவை தாம் சந்திக்க உள்ளதாக, சோமவன்ச அமரசிங்க சிங்கள வாரஇதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. நானும் இந்த தீர்மானத்தினை எதிர்த்து போராடுகின்றேன். ஜெனீவா தீர்மானத்தின் ஊடாக நாடு பிளவடையலாம், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். இதனால் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றோம் என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யிலிருந்து விமல் வீரவன்ச வெளியேறியதையடுத்து சோமவன்ச அமரசிங்கவும், விமல் வீரவன்சவும் கடுமையான பகையைக் கொண்டிருந்ததுடன் அவர்களுக்கிடையில், தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








