கொலை தொடர்பில் அறிக்கை கோருகிறது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், டி.மகேஸ்வரன்,ஜோசப் பரராஜசிங்கம், த.மு.தசநாயக்க ஆகியோரின் கொலைச்சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் இலங்கையிடம் கோரியுள்ளது.
சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 133 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் நடைபெவுள்ளது.அதன்போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரினதும் கொலைச்சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் இலங்கைக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 133 ஆவது அமர்வில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை பாராளுமன்றக் குழு, குறித்த கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இரகசியப் பொலிஸாரின் விசாரணைத் தக வல்களை அடிப்படையாகக்கொண்டு அறிக்கை தயாரித்துள்ளதாக இலங்கைக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார். சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 133 அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதியமைச்சர் அனோமா கமகே, எம்.பிக்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ரஞ்ஜித் அலுவிகார, பிமல் ரத்நாயக்க ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்.
133 ஆவது கூட்டத்தொடரில் நடைபெறவுள்ள பாராளுமன்றங்களின் இளம் உறுப்பினர்களுக்கான அமர்வில் பிமல் ரத்நாயக்க எம்.பி.யும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமர்வில் பிரதியமைச்சர் அனோமா கமகேயும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி.யும் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை மனித உரிமைகள் தொடர்பிலான அமர்வில் ரஞ்ஜித் அலுவிகார எம்.பி.கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








