பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தனை காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2005ம் ஆண்டு மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்த விசாரணைகளுக்காக நேற்று பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் நேற்று மாலை 05.00 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். அங்கு ஆரம்ப கட்ட வாக்குமூலத்தை பெற்ற பின்னர் கைதான பிள்ளையானை காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் முன்னதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் மற்றும் ரங்கசாமி கனகநாயகம் எனும் இருவர் கைதாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








