விடுதலை செய்ய கோரி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
தங்களை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் எந்தவித விசாரணையும் இன்றி 10 தொடக்கம் 20 வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை அரசு கடந்த வாரம் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. எனவே திட்டமிட்டபடி தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லாட்சி அரசிலும் தாம் ஏமாற்றப்படுவ தாகவும், தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கு முடிவு கட்டுவதற்காகவே தொடர் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள தாகவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். எனவே நாளைமறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் திட்டமிட்ட விதத்தில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் கூறினர்.








