Breaking News

குற்றச்சாட்டுக்களை மறுப்பதுடன் சட்ட நடவடிக்கைக்கு தயாராகின்றது லைக்கா


பிரித்தானியாவின் பஸ்பீட் ஊடகம் லைக்கா நிறுவனத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை லைக்கா நிறுவனம் முற்றுமுழுதாக மறுக்கின்றது. அத்துடன் இந்த செய்தியறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பஸ்பீட் மீதும், லிபரா நிறுவனம் மீதும் சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து லைக்கா மொபைல்ஸ் தனது சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடிவருவதாக தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் தொடர்பில் முன்வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதானது, ‘பஸ்பீட் ஊடகம் தனது விசாரணையை நிறைவு செய்து தனது கட்டுரை முழுவதையும் வெளியிடும் வரை நாங்கள் காத்திருந்தோம். முழுமையான தகவல்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் அதுகுறித்து எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.

கடந்த சில நாட்களில் எம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட ஊகங்களையும் நாங்கள் முற்றுமுழுதாக மறுக்கின்றோம். குறித்த கட்டுரையினை ஆராய்ந்து பஸ்பீட் மீது முன்னெடுக்கக்கூடிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு நாங்கள் எங்கள் சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.

மேலும் லிபரா நிறுவனம் லைக்கா மொபைல்;ஸ் நிறுவனத்தை உளவு பார்த்ததாக பஸ்பீட் கட்டுரை குற்றஞ்சாட்டுவதையும் நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். இந்த தகவலை நாங்கள் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்வதுடன், லிபரா மீது முன்னெடுக்க வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் எங்கள் சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்துவருகின்றோம்.

பஸ்பீட்டின் குறித்த கட்டுரையில் லைக்கா மொபைலஸ்; நிறுவனத்திற்கு பணம் கிடைக்கும் வழிகள் மற்றும் அந்தப் பணம் தபால் நிலையம் போன்ற நிறுவனங்களில் வைப்பில் இடப்படுவது மற்றம் ஜி4எஸ் (G4S) இனால் சேகரிக்கப்படுவது தொடர்பில் குறித்த கட்டுரையில் பஸ்பீட்டினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களிம் இருந்து பணத்தைப் பெற்று வைப்பில் இடுவது தொடர்பான தவல்கள் நிதியினை நாங்கள் சட்டரீதியாகவே கையாளுவதனை வெளிப்படுத்துகின்றது. எனினும், லைக்கா மொபைல்ஸ் ஊழியர்கள் மற்றும் தபால் நிலைய பணியாளர்களின் முகங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை பஸ்பீட் தனது கட்டுரையில் வெளியிட்டுள்ளது.

இது அந்த ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அவர்களுடைய அடையாளங்களை வெளியிடாதவகையில் அந்தக் கட்டுரையை பிரசுரித்திருக்கமுடியும். இது தேவையற்ற ஒரு நடவடிக்கை என நாங்கள் கருதுவதுடன், அந்தக் கட்டுரையை வாசித்திருந்த சிலர் அதற்கு வழங்கியுள்ள பதில் கருத்துக்கள் அந்த ஊழியர்களுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பஸ்பீட் தனது செய்திக் கட்டுரையை வெளியிட்ட விதத்தினால் ஊழியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்யமுடியும் என்பது குறித்து நாங்கள் முழுமையான ஆய்வு ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த கட்டுரைகள் வெளியிடப்படுவது குறித்து நாங்கள் இது தொடர்பான பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியிருந்தோம்.

கடந்த சிலநாட்களில் எழுந்த ஊகங்கள் மற்றும் எங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். மேலும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை உறுதியாக எதிர்ப்போம் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

பஸ்பீட்டின் இரண்டாவது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளினால் எந்த விதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதனை நாங்கள் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான தொடர்புகள் குறித்து பஸ்பீட் வெளியிட்டுள்ள மூன்றாவது கட்டுரையில், லைக்கா மொபைல்ஸ் மீது லிபாரா நிறுவனம் உளவு பார்த்த குற்றச்சாட்டு தொடர்பில் குறிப்பிடும்போது, ‘முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எட்டுப் பேரின் அறிக்கை மற்றும் ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வாளர்கள் எந்தவிதமான தொடர்பினையும் அடையாளம் காணவில்லை’எனக் குறிப்பிட்டுள்ளது.

பஸ்பீட்டின் மூன்றாவது கட்டுரையில் குறிப்பிடுகின்றது, ‘லிபரா தனது போட்டி நிறுவனத்தை (லைக்காமொபைல்ஸ்) உளவு பார்க்க முகவர்களை வேலைக்கு அமர்தியிருந்தது. மேலும்; ‘போட்டி நிறுவனத்தில் உள்ள தவறுகளை கண்டறிந்து அதனை லிபரா தனது வணிக ரீதியான வெற்றிக்கு பயன்படுத்துவதே இதன் நோக்கம்’எனக் குறிப்பிட்டுள்ளது.

லிபரா நிறுவனம் லைக்கா மொபைல்ஸ் நிறுவனத்தை வர்த்தக ரீதியில் உளவு பார்த்துள்ளதாக பஸ்பீட் குற்றம் சாட்டுகின்றது. இவ்வாறான தகவல்களை நாங்கள் மிகவும் கவனத்தில் கொள்வதுடன், லிபரா நிறுவனம் மீது முன்னெடுக்கக்கூடிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து எங்களது சட்டத்தரணிகளிடம் குறிப்பிட்டுள்ளோம். மேலும் 2014 ஆம் ஆண்டில் தேசிய குற்றவியல் முகவர் நிலையத்திடம் கோப்பு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த கோப்பு குறித்து தேசிய குற்றவியல் முகவர் நிலையத்தினாலோ அல்லது வேறு அதிகாரிகளினாலோ எங்களிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என நாங்கள் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதுடன், அந்தக் குற்றச்சாட்டுக்களை உறுதியாக எதிர்ப்போம் எனத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் பஸ்பீட் எமது அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட மற்றும் ரகசியமான ஆவணம் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளதையும் நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். ஆதனை அவர்கள் மறுக்கவில்லை. இது குறித்து நாங்கள் பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கட்டுரையில் காணப்படும் தொடர்;ச்சியான அரசியல் குறிப்புக்கள் மற்றும் குறித்த கட்டுரையின் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த தொடர்ச்சியான கட்டுரைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்லது லிபராவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.’