மஹிந்த ஆட்சியில் இருந்த ஊடக அச்சுறுத்தலை நீக்கியுள்ளோம் : மைத்திரி
கடந்த காலத்தில் காணப்பட்ட ஊடக அச்சுறுத்தலை நீக்கி ஊடகச் சுதந்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொன்னாடைப் போர்த்தி கௌவரவிக்கப்பட்டதுடன், இந்திய ஊடகவியலாளர்களினால் அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதி தெரிவித்ததாவது :-
‘கடந்த பல தசாப்தங்களாகவே நாட்டில் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கைகால்கள் இல்லாது போனது. காணாமற்போனார்கள். புதிய அரசாங்கம் என்ற வகையில் நாம் நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம்.
வெள்ளை வேன் கடத்தல், அச்சுறுத்தல், தொலைபேசியூடாக தலைப்பு செய்திகளை மாற்றுமாறு உத்தரவிடுதல் போன்றவற்றைக் கடந்த காலங்களில் நாங்கள் கண்டோம்.
அமைச்சர்களுக்கு எதிராக எழுதும்போது அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு தொலைபேசியில் அழைத்தது என்பது எமக்கு தெரியும். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு தொடர்பில் தீரமானம் எடுத்த சந்தர்ப்பத்தில் அதனைத் திசை திருப்ப முயன்றனர். ஆனால் ஊடகவியலாளர்கள் மிகவும் புத்திசாதுர்யமாக செயற்பட்டனனர்.” என்றும் கூறினார்.
இந்த வைபவத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 10 பேர் கௌரவிக்கப்பட்டனர். சிரேஷ்ட சித்திரக் கலைஞரான திலக் கலுலியனகே அந்த தருணத்தில் வரைந்த ஓவியமொன்றும் ஜனாதிபதிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.








