தமிழினியின் இறுதிக் கிரியைகள் இன்று பரந்தனில்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான, தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.
இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.தற்போது பரந்தனில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு, பெருமளவான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி கடந்த மே மாதம் 15ஆம் திகதி மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார். இறக்கும்போது இவரது வயது 43 ஆகும்.
கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழினி கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக இணைந்து பின்னர் கேணல் தரத்திற்கு உயர்த்தப்பட்டார். தமது சிறந்த செயற்பாடுகளால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்ட அவர், இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை படையினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழினி, பின்னர் குடும்ப வாழ்வில் தம்மை முற்றாக இணைத்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








