ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக் கூடாதென அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறித்து நாம் அறியோம்!
இலங்கை வந்துள்ள காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா. செயற்குழுவை சந்திக்கும் பாதிக்கப்பட்டோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் செயலாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று முன்தினம் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழுவானது பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அவ்வாறு ஐ.நா. குழுவை சந்திக்கும் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பாக வினவிய போதே பான் கீ மூனின் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
'' இவ்வாறு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் ஊடாக ஏதாவது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா என நான் அறிந்திருக்கவில்லை"" என்று ஸ்டீபன் டுஜாரிக் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
அதன் பின்னர் கலந்துரையாடலை முடித்துவிட்டு வெளியே வந்த சந்தியாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது தான் எந்தவித கருத்தையும் கூறவிரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றிருந்தார். அது மட்டுமன்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டாமென ஐ.நா. பிரதிநிதிகள் தன்னிடம் கூறியதாகவும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்திருந்தார்''
எமது சந்திப்பு சிறப்பாக அமைந்தது. எனது கவலைகளை அவர்களிடம் எடுத்துக் கூறினேன் . இது தொடர்பான எமது நிலைப்பாட்டை அடுத்தவாரம் ஐ.நா. செயற்குழு அறிவிக்கும்'' என்று குறிப்பிட்டிருந்தார். யார். இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவேண்டாம் என்று கூறியது என எழுப்பப்பட்ட கேள்விக்கும் சந்தியா எக்னெலிகொட பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலா ளர் கேள்வி எழுப்புகையில் ஐ.நா.வின் காணாமல் போனோர் செயற்குழு இலங்கைக்கு சென்றுள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முடியாது என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஏதாவது அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதா? என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த பான் கீ மூனின் பேச்சாளர் டுஜாரிக் எனக்குத் தெரியாது குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி:- அவ்வாறு ஏதாவது அறிவுறுத்தல்கள் ஏற்கனவே உள்ளனவா?
நீங்கள் இதனை ஜெனிவா பிரதிநிதிகளிடம் கேட்கலாம். இது நான் இங்கிருந்து பதில ளிக்கக் கூடிய கேள்வியல்ல.