காணாமல்போனோர் குறித்து ஆராய ஐ.நா.செயற்குழு இலங்கை வருகிறது
யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த செயற்குழு அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நேற்று
வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹேஷினி கொலன்னே இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
நாட்டில் கடந்தக்காலங்களில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கையின் போது நாடளாவிய ரீதியில் காணாமல் போனோர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான தகவல் திரட்டி அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகளை சேர்ந்தகாணாமல் போனோர் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் செயற்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
குறிப்பிட்ட இந்த செயற்குழுவின் பிரதி தலைவரின் தலைமையிலான ஐந்து பேரை கொண்ட குழுவே இந்த விஜயத்தை இம்மாதம் ஒன்பதாம் திகதி முன்னெடுக்கவுள்ளது.
இவர்கள் இம்மாதம் ஒன்பதாம் திகதி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து யாழ்பாணம், திருகோணமலை, காலி. உள்ளிட்ட வடக்கிழக்கு பகுதிகளில் கடந்தக்காலங்களில் காணாமல் போனோர் மற்றும் பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பிலான தகவல்களை அவர்களின் உறவினர்களுடமிருந்து திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர்..
இந்த குழு கொழும்பில் தொடர்ந்து ஜந்து நாட்கள் தங்கியிருந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள்,அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளது.
இறுதியில் இந்த குழுவினால் நாடளாவிய ரீதியில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிபடையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அரசுக்கு கையளிக்கவுள்ளதோடு இந்த விஜயத்தின் இறுதி தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுக்கவுள்ளது என்றார்.