அரசும்,கூட்டமைப்பும் தேசிய பிரச்சினைக்கான தீர்வை ஏற்கனவே தயாரித்துவிட்டன - தினேஷ்
தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் ஏற்கனவே அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த திட்டத்தை அவர்கள் விரைவில் வெளியிடலாம். ஆனால் ஜனநாயகக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு தீர்வை முன்வைக்க முயற்சித்தால் நாங்கள் அதற்கு இடமளிக்கமாட்டோம் என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி அடுத்துவரும் சில வருடங்களை கடத்துவது மிகவும் கடினமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசாங்கம் பேசிக்கொண்டிருக்கின்றது. தேசிய பிரச்சினைக்கான தீர்வுகாணும் செயற்பாட்டில் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினால் பரவாயில்லை. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை மீறுவதாக இருக்கக்கூடாது.
இங்கு ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது கடந்த ஜனவரி மாதம் நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மற்றும் ஆகஸ்ட் மாதம் உருவாகிய புதிய அரசாங்கம் என்பனவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
அந்தவகையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும் அவர்கள் விரைவில் அந்த திட்டத்தை வெளியிடலாம். தற்போது ஒற்றுமையாக செயற்படும் அரசாங்கமும் கூட்டமைப்பும் தீர்வு விடயத்தில் இதுவரை இணக்கப்பாட்டுக்கு வந்திருக்காது என்று எண்ண முடியாது.
மக்களுக்கு நன்மையளிக்காத வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கின்றது. மக்கள் வீதிக்கு இறங்கி தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நிலை உருவெடுத்துள்ளது. இவ்வாறான நெருங்கிய ஒற்றுமையுடன் செயற்படும் அரசாங்கமும் கூட்டமைப்பும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் ஜனநாயகக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு தீர்வை முன்வைக்க முயற்சித்தால் நாங்கள் அதற்கு இடமளிக்கமாட்டோம். தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமானது அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடனும் முன்னெடுக்கப்படவேண்டியதாகும். இந்த விடயம் குறித்த சர்வகட்சி மாநாடும் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சர்வகட்சி மாநாட்டின் அடுத்த அமர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றது. அடுத்த சில வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை கேள்விக்குறியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி அரசாங்கத்தினால் நாட்டை கொண்டு நடத்த முடியாத நிலை உருவாகும். அதனால்தான் தற்போது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை இலங்கையில் அமுல்படுத்த முயற்சிக் கின்றது என்றார்.