வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடக்கின்றது? - கேள்வி எழுப்பும் மஹிந்த
தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடக்கின்றது? சர்வதேசத்தையும் புலம்பெயர் புலிகளையும் திருப்திப்படுத்தும் நோக்கத்தில் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தை எதிர்த்து மக்களை இணைந்துக்கொண்டு போராடவேண்டிய காலம் வந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ஆதரவு அணியினரின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டை சர்வதேசம் அடக்கி ஆளும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ளது. எமது பாதுகாப்பு,எமது உரிமைகளை பலப்படுத்தவும், மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் நாம் இன்று சர்வதேச நாடுகளிடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாம் கடந்த காலத்தில் நாட்டில் எவரது தலையீடிற்கும் இடமளிக்காது சுயாதீனமாக எமது நாட்டை பலப்படுதினோம்.
சர்வதேச உதவிகளும், அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு விடயத்தில் எவரது தலையீட்டையும் அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று அவ்வாறான ஒரு நிலைமை இல்லை. இன்று இலங்கையின் பாதுகாப்பில் மாத்திரமே அனைத்து நாடுகளும் தலையிடுகின்றன.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஒரு வருட காலத்தில் நாட்டில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. அரச ஊழியர்கள் வீதியில் இறங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின் சீருடை முதற்கொண்டு கொள்ளையடிப்புகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒருவருட காலமாக நாட்டில் எந்த வீதியும் புனரமைக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு மேடைகளிலும் கூட்டங்களிலும் நல்லாட்சி என தெரிவிக்கின்றனர்.
எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தி செயற்பாட்டையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. மக்களின் வயிறு காய்கின்றது, அவற்றை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.
ஆனால் இந்த அரசாங்கம் எமது நாட்டு மக்களை பற்றி சிந்திக்காது புலம்பெயர் புலிகளின் தேவையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை பற்றி சிந்தித்து வருகின்றனர். வடக்கில் இன்று என்ன நடக்கின்றது, கிழக்கில் என்ன நடக்கின்றது. சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்ற அனைத்தையும் அரசாங்கம் மூடி மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது. ஆனால் இரகசியமாக புலிகளின் கரங்களை மீண்டும் பலப்படுத்தும் நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை செய்வதுடன் வடக்கில் பாதுகாப்பு பகுதிகளை நீக்கி இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்றுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதன் மூலமாக மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டிற்கு எதிரான இந்த செயற்பாடுகளை கண்டிக்கவோ பாராளுமன்றத்தில் எதிர்த்து பேசவோ பலமான எதிர்க்கட்சி கூட இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்று எவரும் வாய்திறக்கவில்லை. நாம் எமது ஆட்சியில் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டுசென்ற போது இவர்கள் அனைவரும் எம்மை விமர்சித்து பொய்யான குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.
எமது இராணுவம் மீதான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விமர்சித்தனர். ஆனால் இன்று நாட்டில் பாதுகாப்பு நடவைக்கைகள் எவையும் இல்லை. மாறாக புலிகளை விடுதலை செய்தும் புலம்பெயர் அமைப்புகளை இலங்கையில் சுதந்திரமாக செயற்பட அனுமதித்தும் சர்வதேசத்தை திருப்திப்படுத்தியுமுள்ளனர். ஆகவே இப்போது சர்வதேச குற்றச்சாட்டுகள் எவையும் முன்வைக்கப்படாது.
எனவே இன்று நாட்டை சர்வதேச பொறிமுறைக்குள் கொண்டு சென்று எம்மீதான பொய்யான குற்றசாட்டுகளை உண்மையென நிரூபிக்கும் நடவைக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே இந்த அரசாங்கத்தை எதிர்த்து மக்களை இணைந்துக்கொண்டு போராடவேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. வெகு விரைவில் மீண்டும் நல்லாட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றார்.