Breaking News

வித்தியா கொலை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.புங்குடுதீவு பிரதேச பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுவரை குறித்த வழக்கு விசாரணையை நடத்திய நீதவான் எஸ்.லெனின்குமார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், ஊர்காவற்துறை நீதிமன்றிற்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள ஏ.எம்.எம்.றியாஸ் தலைமையில் முதல் தடவையாக இன்றைய தினம் இவ்விசாரணை நடைபெற்றது. இன்றைய தினம் சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லையெனவும், தம்மை பழிவாங்கும் முயற்சியில் பொலிஸார் வீண்பழி சுமத்தியுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை எழு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வித தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. குறிப்பாக வித்தியாவின் உடம்பிலிருந்து பெறப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கையை கையளிப்பதிலும் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.