மஹிந்தவின் கருத்துக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும்போது அவர்களை கைது செய்து, வலைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியதை தான் கண்டிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நேற்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த 104 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். 66 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர், இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும்போது அவர்களை கைது செய்து, வலைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சரின் இத்தகைய பேச்சு கண்டிக்கத்தக்கது.
இருநாட்டு மீனவர்களிடையே சுமூகத் தீர்வு ஏற்பட தடையாக இருக்கும் அமைச்சரின் இந்த பேச்சை இலங்கை அரசு கண்டிக்க வேண்டும். மத்திய அரசு இதைக் கண்டிப்பதுடன் இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு விடுவிக்கவும், படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.








