இலக்கு நிர்ணயித்து மீனவர்களை சிறைப்பிடிக்கும் இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்
ஒரு மாதத்திற்குள் தமிழக மீனவர்கள் 500 பேரை கைது செய்தே ஆக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மீனவர்களை சிறைப்பிடிக்கும் இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இம்மாதம் குறைந்தது 500 தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படைக்கு ஆணையிட்டுள்ளார். இவ்வாறு இலக்கு நிர்ணயித்து தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டும் எனும் அமைச்சரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு சவால் விடுவதாக உள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகலானது. அங்கு மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அதனை சர்வதேச நீதிமன்றங்களும் அங்கீகரித்துள்ளன. மேலும் இலங்கை செல்லும் வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் சிறையில் தவித்து வரும் 104 இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சுவார்த்ததை நடத்த வேண்டும். மேலும் 2003ஆம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை உடனடியாக இரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்து இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றார்.








