வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாமை அகற்ற கோரி வடக்கு மாகாண சபையில் பிரேரணை
வன்னியில் இதுவரை விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மூன்று பிரேரணைகள், வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வட மாகாண சபையின் இவ்வருடத்திற்கான முதலாவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோது குறித்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதலாவதாக, முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பிரதேசத்தில் 626 ஏக்கர் காணியை கடற்படை முகாமிட்டுள்ளதாகவும் அதனை விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும் து.ரவிகரன் பிரேரணையொன்றை முன்வைத்தார்.
மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் எழுபத்து ஐந்து இலட்சம் ரூபா சொத்து, பதிவேட்டில் இருந்தபோதும் சில அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் து.ரவிகரன் மற்றுமொரு பிரேரணை கொண்டுவந்தார்.
மேலும், 1991ஆம் ஆண்டு உள்ளூராட்சி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு விசேட பயிற்சியின் பின்னர் பல வருடங்களாக பிரதேச சபைகளில் செயலாளர்களாக பணிபுரிந்து வந்த உள்ளூராட்சி உதவியாளர்கள் கடந்த முதலாம் திகதி முதல் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திணைக்களத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மீன்பிடி அமைச்சர் பா.டெனீஷ்வரன் பிரேரணையொன்றை சமர்ப்பித்தார். குறித்த பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்தோடு, சுன்னாகம் மக்கள் எதிர்நோக்கும் நீர்ப்பிரச்சினை தொடர்பிலும் நேற்றைய அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, சபை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் வவுனியா பரக்கும் மகா வித்தியாலயம் மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








