கூட்டமைப்பின் நம்பிக்கையை வீணடிக்க வேண்டாம்! அரசாங்கத்தை வலியுறுத்துகிறார் மனோ
வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் மாத்திரமன்றி புலம்பெயர் சமூகத்தினர் என அனைத்து தரப்புக்களிடத்திலும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பினையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து நிற்கின்ற இத்தகைய தீவிரவாதிகளுக்கு மத்தியிலேயே அரசின் ஒற்றையாட்சி எனும் பதத்துக்குள்ளான தீர்வுத் திட்டங்களுக்குள் கூட்டமைப்பு இறங்கி வந்துள்ளது.
எனவே கூட்டமைப்பின் நம்பிக்கைகளை வீணடிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு விடக்கூடாது என்று அமைச்சர் மனோ கணேசன் நேற்று சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றியமைத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மனோ இங்கு மேலும் கூறுகையில்;
தேசத்தின் தந்தை என வர்ணிக்கப்படுகின்றவரான டி.எஸ். சேனாநாயக்க கூறியுள்ளது போன்று எமது நாட்டில் பல்லின மக்கள் வாழ்வதாலும் பல மதங்கள் பின்பற்றப்படுகின்றதாலும் இங்கு பன்முகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்னைய தலைவர்கள் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முயற்சித்த போதிலும் சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருந்தது வரலாறாகும்.
வடக்கு கிழக்கு தெற்கு ஆகிய பிரதேசங்களே சந்தர்ப்பங்களை தவறவிட்டன என்று குற்றங்களை சுமத்திக் கொண்டிருப்பதை விடுத்து அதற்கான பொறுப்புக்களை அனைவரும் ஏற்றக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இன்றைய நிலையில் எமது நாட்டில் யுத்தம் இல்லை. இனவாதம் மதவாதம் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. அரச பயங்கவாதமும் இல்லை.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கோ தமிழ் முற்போக்கு கூட்டணிக்கோ அப்படியான எண்ணம் இருக்கவில்லை. நிறைவேற்று அதிகார முறைமை இருக்கும் பட்சத்திலேயே பேரம் பேசும் நிலையும் இருக்கின்றது.
ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சிக்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து வாக்களித்தனர். இப்படி அவர்கள் வாக்களித்தமையானது சிங்கள மக்களின் உரிமைகளைப் பறித்தெடுப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்திருந்தனர்.
அரசாங்கத்தின் ஒற்றையாட்சிக்குள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கி வந்து ஆதரவளித்து செயற்படுகிறது. கூட்டமைப்பு இப்படி செயற்படுவதால் அக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்தியங்களில் மாத்திரம் அன்றி புலம்பெயர் நாடுகளிலும் கூட எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. தீவிரவாதிகளாக செயற்படுவோரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களாக இருக்கின்றனர்.
வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது. அவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டு விடவும் கூடாது. அதே நேரம் நம்பிக்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையை அரசாங்கம் வீணடித்து விடக்கூடாது என்றார்.








