தமிழ் மக்கள் கண்ணீருடன் வாழும் போது, தேசிய பொங்கல் விழா எதற்கு?
தமிழ் மக்கள் கண்ணீருடன் வாழும் போது, தேசிய பொங்கல் விழா களியாட்டம் யாழ்ப்பாணத்தில் எதற்கு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.
தேசிய பொங்கள் விழாவிற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக கறுப்பு கொடி போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘ஜனாதிபதியும், பிரதமரும் பொங்கல் விழாவிற்கு வருகைதரவுள்ளார்கள். நல்லாட்சி நிலவுவதாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அதேநேரம், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் வீதிகளில் நடமாடித் திரிகின்றார்கள். இராணுவத்தில் சரணடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் என்போர் விடுவிக்கப்படவில்லை.
இவர்களுக்கு என்ன நடந்ததென்ற பொறுப்புக் கூறலை கூட இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அரசியல் கைதிகள் இரு தடவை உண்ணாவிரதம் இருந்தும், விடுவிக்கப்படாமல் தொடர்சியாக அரசியல் கைதிகளாக இருக்கின்றார்கள்.
பொது மக்களின் காணிகளை விடுவிப்பதாக கூறியிருந்தாலும், ஏமாற்று வேலையாக சில பகுதி காணிகளை மட்டும் விடுவித்துள்ளது. ஒரிரு அரசியல் கைதிகளை விடுவித்து விட்டு, நல்ல பிள்ளையாக தன்னை சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
அன்றாடம் கண்ணீருடனும் கவலையுடனும் வாழ்ந்துகொண்டு இருக்கின்ற போது, தமிழ் மக்களாகிய நாங்களே தைப்பொங்கலை கொண்டாடாத இந்த நேரத்தில், இந்த அரசாங்கம் என்னத்தினை வெளி உலகிற்கு காட்டுவதற்காக யாழ்ப்பாணத்தில் பொங்கலை கொண்டாடப் போகின்றார்கள்? எனவே, நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் ஒரு வருடமாகியும், தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை’ என்றும் குற்றஞ்சாட்டினார்.








