கனவு காணவேண்டாம்! கூட்டமைப்புக்கு ஜேவிபி அறிவுரை
புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்வதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினதோ, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினதோ தொழில் வாய்ப்பின்றியிருக்கும் தமிழ் இளைஞர், யுவதிகளினதோ வடக்கிலே உள்ள விவசாயிகளினதோ, மீனவத் தொழிலாளர்களினதோ அல்லது அவர்களால் எதிர்கொள்ளப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கோ தீர்வுகள் கிடைத்துவிடும் என்று எவரும் நினைத்துவிடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு நினைத்தால் அது அவர்களது அரசியல் இலாபம் கருதியதாகவே அமையும் என்று ஜே.வி.பி. நேற்று சபையில் தெரிவித்தது.
புதிய அரசியலமைப்பொன்று வேண்டும் என்பதில் எம்மிடம் மாற்றுக் கருத்தில்லை. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்கிய பிரதிநிதிகளை இணைத்துக் கொண்டு புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதா அல்லது அரசாங்கமே அரசியலமைப்பு வரைபொன்றை தயாரித்து சமர்ப்பிப்பதா என்பதை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன் அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபை தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனுர குமார எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்;
எமது நாட்டு அரசியலமைப்புச் சட்டமானது 19 தடவைகளாக திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவற்றில் 17 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் தவிர்ந்த ஏனைய 17 திருத்தங்களும் அவ்வப்போது இருந்த ஆட்சியாளர்கள் தமது அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டவையாகவே உள்ளன. இந்த திருத்தங்கள் எதுவுமே குறித்து நாம் சிந்திக்கவில்லை. இக்காலப் பகுதிகளில் மேற்படி திருத்தங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கென பணம், பதவி போன்ற சலுகைகளை வழங்கியே அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பதை நாம் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்து எம்மிடம் இல்லை. எனினும் முதலாளித்துவ அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனைய தரப்புக்களின் கைகளைக் கட்டிப் போடுகின்ற மற்றும் குரல்களை நசுக்குகின்றதாகவும் இருக்க முடியாது. அனைத்து தரப்பினருக்குமான உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பிரதமர் முன்வைத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம் பிரதமரினதும் அவர் சார்ந்த குழுவினரதும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவே உள்ளன. இதில் பிரதமர் தனது அதிகாரத்தைப் பிரயோகித்திருப்பது தெளிவாகிறது. அரசியலமைப்புச் சட்டம் தயாரித்தலின் போது அனைத்து அரசியல் கட்சிகளினதும் உறுப்பினர்களதும் கருத்துக்கள் உள்வாங்கப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டு செயற்படுதல் அவசியமாகும்.
அந்த வகையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் பட்சத்தில் அனைத்து கட்சிகளும் உள்வாங்கப்படும் முறைமை ஒன்றுக்கு செல்வதா அல்லது அரசாங்கமே புதிய அரசியலமைப்பு வரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிப்பதா என்பது தொடர்பில் அரசாங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்பதாக தீர்மானிக்க வேண்டும்.
மேலும் புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதுடன் எமது பணிகள் நிறைவுக்கு வர வேண்டும். என்பதுடன் சட்ட மூலம் தயாரிக்கப்படுதல் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுதல் உயர் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துதல் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல் ஆகிய பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி விடுவதன் மூலம் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும் என்று எவரும் நினைக்க முடியாது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குத் தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துப் கொண்டிருக்கின்றனர். அங்கு அவர்கள் நில உரிமை கோரவில்லை. மாறாக தமக்கு நிலமே கோருகின்றனர். தொழிலின்றி இளைஞர் யுவதிகள், பொருளாதார, வாழ்வாதார பிரச்சினைகளில் மீனவத் தொழிலாளர்கள், விவசாயிகள் என துன்பம் அனுபவிக்கின்றனர்.
அந்த மக்களின் மனங்கள் வெல்லப்பட வேண்டும். யாழ். பல்கலை மாணவர்களதும் பாடசாலைகளினதும் பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி விடுவதன் மூலம் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைக்குமானால் அது அக்கட்சியினரின் அரசியல் சுயலாபம் கருதியதாகவே இருக்கும் என்றார்.








