Breaking News

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை மீண்டும் யாழில்

யுத்தத்தின்போது காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த குழு பதினைந்து நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து விசாரணைகளை நடத்துமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை, கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் யாழில் இடம்பெற்றது. அதன்போது பெறப்பட்ட ஆயிரத்து அறுநூறு முறைப்பாடுகளில், தெரிவுசெய்யப்பட்ட முந்நூறு முறைப்பாடுகள் குறித்து பரணகம தலைமையிலான விசாரணை குழு இந்த பதினைந்து நாட்களில் விசாரணைகளை முன்னெடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தலைமையில் நிறுவப்பட்ட குறித்த ஆணைக்குழு, வடக்கு கிழக்கில் கட்டம் கட்டமாக பல விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. எனினும், அதன் நகர்வுகள் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியே நிலவி வருகிறது. இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நிறைவடையவுள்ள ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.