Breaking News

ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றால் எதற்கு புதிய அரசியல் யாப்பு? – சிவாஜிலிங்கம் கேள்வி

ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு பெற்றுத்தரப்படுமென்றும் பௌத்தத்தை பாதுகாப்போம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டால், எதற்காக புதிய அரசியல் யாப்பினை உருவாக்க முனைகின்றீர்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணிலின் உரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்-

‘யுத்தத்தின்போது கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கருத்தினை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி கேட்கவேண்டும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கள் தமிழ் மக்களை ஆளாத்துயரத்திற்குள் தள்ளிவிட்டுள்ளன. முதலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள். நல்லிணக்கம் இல்லாத ஒரு இடத்தில் எவ்வாறு மீள் நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும்?

அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 13ஆம் திருத்தத்திற்கு மேலே போக முடியாதென்றும், வடக்கு கிழக்கினை இணைக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார். காலியில் நடைபெற்ற யுத்த வெற்றி நிகழ்வில், டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கேட்பதை கொடுக்க வேண்டுமென நீங்கள் கூறியதை மறந்துவிட்டீர்களா?

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒற்றை ஆட்சிக்குள்தான் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் பௌத்த மதத்தினை பாதுகாப்போம் என்றும் கூறினால் ஏன் புதிய அரசியல் யாப்பினை உருவாக்க முனைகின்றீர்கள்? இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உட்பட அனைத்து சிங்கள தலைவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்’ என்றார்.