மீண்டும் யுத்தம் ஏற்படாதவகையில் ஒன்றிணையவும் - ஜனாதிபதி அழைப்பு
நாட்டு மக்களிடம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மாத்திரம் முடியாது எனவும், அதனை சமய தத்துவங்களுக்கேற்ப மேற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பயாகலை இந்து கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டிலுள்ள சகல இனங்களுக்கு மத்தியிலும் அச்சம், சந்தேகத்தை இல்லாதொழித்து சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு சகல மதத் தலைவர்களுக்கும் ஜனாபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புகின்றபோது இன, மத பேதங்கள் தடையாக அமையக்கூடாது எனவும், நாட்டிலுள்ள எல்லா இனத்தவர்ளும் சமாதானம் மற்றம் ஐக்கியத்துடன் வாழ்வதைக் காண்பதே தமது நோக்கமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரசியல்வாதிகளை விடவும், சமயத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களைப் பலப்படுத்தி மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாதவகையில் அடித்தளத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து மதங்களினதும் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளைப் பயன்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.








