நாங்கள் பயங்கரவாதிகள் என்றால் நீங்கள் யார்?- சிவாஜிலிங்கம் கேள்வி
உரிமைகளுக்காக போராடிய தாம் பயங்கரவாதியென்றால், ஆயுதம் ஏந்திய மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து வந்த விமல் வீரவன்ச அகிம்சைவாதியா என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் பயங்கரவாதம் தலை தூக்கும் என்றும், பயங்கவரவாதிகள் விடுவிக்கப்படுகின்றனர் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்த கூற்றிற்கு சிவாஜிலிங்கம் இதன்போது கண்டனம் தெரிவித்தார். தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் இவ்வாறான தகவல்கள் ஆறுதலையும், ஆரோக்கியத்தினையும் தரவில்லையென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் அவசரமாக இடம்பெறுவதாகவும், தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.








