ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும். தேர்தலுக்கான தொகுதி நிர்ணய பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
விருப்புவாக்கு முறைமை முழுமையாக ஒழிக்கப்பட்டு புதிய தேர்தல் முறைமையிலேயே 2016 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தினுள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய பணிகளை முழுமையாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல் எதிர்வரும் ஜூன் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவும் அரசாங்கம் தயாராகவே உள்ளது. அதற்கான சகல சலுகைகளையும் ஜனாதிபதி எமக்கு வழங்கியுள்ளதுடன் விரைவில் இந்த பணிகளை முடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் மாவட்ட ரீதியிலும் எல்லை நிர்ணய பணிகளை மேற்கொண்டு செல்கிறோம். இது தொடர்பில் அனைத்து கட்சிகளும் மேன் முறையீடுகளை முன்வைத்துள்ளன.
நாம் பழைய முறைமையிலேயே இந்த தேர்தலை நடத்தவுள்ளகாக சிலர் கூறுகின்றனர். ஆனால், பழைய முறைமையில் ஒரு போதும் தேர்தலை நடத்த நாம் தயாராக இல்லை. பழைய முறைமையில் தேர்தலை நடத்தி கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைவருக்குமே தெரியும். அரசியல் ரீதியிலும், பொதுமக்களை பாதிக்கும் வகையிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே, ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதி வழங்கியமைக்கு அமைய புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதே எமது நோக்கமாகும்.
மேலும் இம்முறையில் இருந்து தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இலங்கையை பொறுத்த வரையில் 52வீதம் பெண்களின் ஆதிக்கம் இருந்தாலும் பாராளுமன்றத்தில் 2 வீதமேனும் பெண்களின் ஆதிக்கம் இல்லை என்பதே உண்மையாகும். பெண்களே பெண் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பது மிகவும் குறைவானது. அதேபோல் அரசியலில் ஏனைய நாடுகளில் பெண்களின் அரசியல் ஆதிக்கம் அதிகரித்துவரும் அதே வேளையில் இலங்கையில் மாறாகவே நடக்கின்றது.
எனவே,வரும் தேர்தலில் இருந்து பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலும் தேசியப் பட்டியலில் பெண்களை உள்வாங்குதல் தொடர்பிலும் அக்கறை செலுத்தப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாம் பிற்போடுவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேபோல் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இந்த விடயத்தில் பொறுப்பு கூறவும் முடியாது. ஏனெனில் கடந்த 2012ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை எமது கைகளுக்கு 2015ஆம் ஆண்டே கிடைத்தது. அந்த அறிக்கை தொடர்பில் நாம் திருப்திகொள்ளவில்லை. எல்லா கட்சிகளுக்கும் சார்பாக அமையும் வகையில் அந்த அறிக்கை இருக்கவில்லை.
எனவே தான், அனைத்து கட்சிகளையும் பலப்படுத்தும் வகையில் புதிய திருத்தங்களை கொண்டுவந்தும், எல்லை நிர்ணயம் தொடர்பிலும் மீண்டும் அறிக்கை தயாரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவே தாமதமாவதற்கு காரணமாகவும் அமைந்தது.
அதேபோல், புதிய தேர்தல் முறைமை என்னவென்பது தொடர்பில் அதிகளவானோர் தெளிவில்லாது உள்ளனர். அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே சகல பகுதிகளிலும் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வுள்ளோம். அத்தோடு சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை பாதுகாக்கும் வகையிலும் அனைத்து மக்களும் தமது பிரதிநிதி களை தெரிவுசெய்யும் வகையிலும் நடவடிக் கைகளை மேற்கொள்வோம் என்றார்.








