மைத்திரி - மகிந்த 'இணக்கப் பேச்சுவார்த்தைக்கு' இடையூறு!
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரை எந்தவகையிலாவது இணக்கப்பாட்டிற்குள் கொண்டுவர ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட 'மகிந்தவாதிகள்' உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணமாகும்.
மக்களின் தெரிவாகியுள்ளதால் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மக்கள் ஆதரவு இருப்பதால் எதிர்வரம் தேர்தலை எதிர்கொள்ள அவரிடம் கட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் என குமார வெல்கம பி.பி.சி. செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
''கட்சியின் தலைமைத்துவம் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுக்கிறோம். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் தெரிவு அது. எனினும், இந்தத் தேர்தலில் மக்கள் மகிந்த ராஜபக்ச பக்கமே இருக்கின்றனர். மக்கள் அதனை எதிர்பார்க்கின்றனர். மக்களின் விருப்பத்துடனேயே நாம் பயணிக்க வேண்டும்'' என்று குமார வெல்கம மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, தானும், தனது குடும்பத்தினரும் அரசியல் பழிவாங்கலுக்கு இலக்குவைக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணங்கிச் செல்வது நகைப்பிற்குரிய விடயம் என தமக்கு நெருக்கமான ஒருவரிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினருக்கெதிராக பொலிஸாரை தூண்டிவிடுவதை ஜனாதிபதி மைத்திரிபால என்று தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.








