Breaking News

தலித் மாணவர் தற்கொலை விவகாரம் - வலுவடையும் எதிர்ப்புக்கள்

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவன் செய்து கொண்ட விவகாரத்தில் மத்திய மந்திரிக்கு எதிராக மாணவர்கள் 2–வது நாளாக போராட்டத்தில் குதித்தனர். அவர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

உயிரிழந்த மாணவர் ரோஹித்தின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மாணவர் ரோஹித் தற்கொலை தொடர்பாக மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் அமைப்புகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் ரோகித் வெமுலா உள்பட 5 மாணவர்களை இடை நீக்கம் செய்தது. 

இதையடுத்து, மாணவர் ரோஹித் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதைத்தொடர்ந்து ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. 200–க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்தனர். 

இந்நிலையில் ‘‘தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும். இது ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட படுகொலை ஆகும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுதவிர ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு மாணவர்கள் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.