Breaking News

பிரதமரின் கருத்து அச்சுறுத்தல்! ஊடக அமைப்புகள்

அம்பிலிபிட்டிய இளைஞன் கொல்லப்பட்டமை, ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் பொதுபல சேனா அமைப்பினர் நடந்துகொண்ட விதம் ஆகியவை குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் குறித்து ஒப்பீட்டு ரீதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்துக்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விதத்தில் இருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

''ஹோமாகம சம்பவம் குறித்து ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டிருந்ததா" என்ற பல பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு பிரதமர் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். அத்துடன், ஊடகவியாளர்கள் செயற்படும் விதம், ஊடகவியலாளர்களின் பின்னணியில் சிலர் இருக்கின்றனர் என சில ஊடகவியலாளர்களின் பெயர்களையும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்தக் கூற்று ஒரு அச்சுறுத்தலாகவே இருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.எனினும், தான் ஊடகவியலாளர்களை அச்சுறுத்த இல்லையென நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளித்திருந்தார். எவ்வாறாயினும், பிரதமர் 28ஆம் திகதி தெரிவித்த கருத்துக்கள் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.