Breaking News

மீள்குடியேற்றம் குறித்து ஆராய பொங்கல் நாளன்று பலாலியில் முக்கிய கூட்டம்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது மற்றும், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராயும் முக்கியகூட்டம், எதிர்வரும் தைப்பொங்கல் நாளன்று பலாலிப் படைத்தளத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

பலாலி இராணுவத் தலைமையகத்தில் வரும் 15 ஆம்நாள் பிற்பகல் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. இதில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அன்று மாலை 4மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்தப் பொங்கல் விழாவுக்கு முன்னதாக, பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெறும் சிறப்புக் கூட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீள கையளிப்பது மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக, படைத்தரப்புடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.