Breaking News

வடக்கு,கிழக்கை இணைக்கவோ, 13க்கு அப்பால் செல்லவோ அனுமதியோம்!

அரசியலமைப்பு மாற்றத்தின்போது, 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிரவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என்று, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா, ‘அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தவோ, வடக்கு,கிழக்கை இணைக்கவோ மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சி அனுமதிக்காது.

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம்நாடு துண்டாடப்படப் போவதாகவும் பௌத்த மதத்திற்கு இருக்கும் முன்னுரிமை நீக்கப்படப் போவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இவை எதுவும் கிடையாது.

மக்களினதும் ,அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை பெற்றே அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்.13 ஆவது திருத்தம் எமது அரசியலமைப்பின் அங்கமாகும். 13 ஆவது திருத்தம் நாட்டின் இறைமைக்கு குந்தகமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடன்பாடாது. வெளிநாடுகளுக்கு தேவையானவாறு இதனை திருத்தமாட்டோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.