Breaking News

இலங்கையுடன் உறவைப் புதுப்பிக்க நோர்வே ஆர்வம்

இலங்கையுடன் மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக் கொள்வதில் நோர்வே ஆர்வம் காட்டுவதாக, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்டும் அமைதி முயற்சிகளில், நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே, அந்த முயற்சியில் தோல்வியடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையுடன் அரசியல் உறவுகளை புதுப்பிக்கவுள்ளது.

இதற்காக, நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே, நாளை இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே அமைச்சர் ஒருவர்  மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்று நோர்வே வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையுடன் அரசியல் உறவுகளைப் மீளப்புதுப்பித்துக் கொள்வதே தமது கொழும்புப் பயணத்தின் இலக்கு என்றும், இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்கள் இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகவும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.