இலங்கையுடன் நெருக்கமான உறவுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு
இலங்கையுடன் நெருக்கமான இராணுவ உறவுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தானின் “தி எக்ஸ்பிரஸ் ரிபியூன்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, இலங்கைக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் வழங்கிய முக்கிய நாடாக பாகிஸ்தான் விளங்கியது என்பதையும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், உயர்மட்டப் பயிற்சிகளுக்காக இலங்கை தனது இராணுவ அதிகாரிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.
இந்தநிலையிலேயே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று நடத்திய பேச்சுக்களின் போது, இன்னும் கூடுதலான கடற்படை உறவுகள் வலுப்படுத்தப்படுவதற்கு பாகிஜஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
படையினர் இன்னும் அதிகமான துறைமுகப் பயணங்கள், இராணுவ ஒத்திகைகள், பாதுகாப்புக் கருத்தரங்குகள், பயிற்சிகளில் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருடன், அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜன்ஜுவா, பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராணா தன்வீர் ஹுசேன் ஆகியோரும், இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








